‘நீட்’ மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறதா..? - விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை

நீட் வினாத்தாள் விமானங்கள் வாயிலாக கொண்டு வரப்பட்டு, பின்னர் ஹெலிகாப்டர் வாயிலாக நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
neet , neet exam, nta
Published on

சென்னை,

கடந்த மே மாதம் 3-ந் தேதி நடந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, நாளை மறுநாள் (ஜூன் 21- தேதி) மறு தேர்வு நடத்தப்பட உள்ளது. மறுதேர்வில் எந்தவித குளறுபடிகளும் ஏற்பட்டு விடாமல் இருக்க கல்வித்துறை தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. வினாத்தாள்களை கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

தேர்வு ஒத்தி வைப்பா..?

வினாத்தாள் தயாரிப்பில் இருந்தவர்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளனர். தேர்வு ஏற்பாடுகள் பற்றி துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தேர்வு தொடர்பாக சில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறது.

திட்டமிட்டபடி திட்டவட்டமாக..

அதன் விவரம் வருமாறு:-

தேர்வுக்கு தயாராகியுள்ள ஒவ்வொரு மாணவரும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

நீட் தேர்வு திட்டமிட்டபடி திட்டவட்டமாக நடைபெறும். சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளையோ அல்லது தேர்வு ஒத்திவைப்பு குறித்த தேவையற்ற செய்திகளையோ பார்த்து மாணவர்கள் ஏமாறவேண்டாம். தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ.) அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே முழுமையாக நம்புங்கள்.

தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மையைக் காப்பதே எங்களின் முதன்மை நோக்கமாகும். இதற்காக அதிநவீன மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளில் ஈடுபட முயன்றாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நீட் மறுதேர்வு வினாத்தாள்

நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரங்களுக்கும் வினாத்தாள் விமானங்கள் வாயிலாக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக அனுப்பப்படுகின்றன.

அதன்படி, சென்னைக்கு வினாத்தாள் வந்துவிட்டதா? என்பது குறித்த விவரத்தை பரம ரகசியம் போல பாதுகாக்கின்றனர். இதுவரை நடந்த நீட் தேர்வுகளில் நாளை மறுதினம் நடக்கும் மறுதேர்வு மாணவர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com