

புதுடெல்லி
நீட் மறுதேர்வுக்கான வினாத்தாளும் கசிந்தது என வெளியான வீடியோவால் மாணவ மாணவிகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு இருந்தபோதிலும், தற்போது உலகளவில் அதிகம் பேர் எழுதும் தேர்வுகளில் நீட் தேர்வும் இடம் பெற்றிருக்கிறது.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் (மே) 3-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 22 லட்சம் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதி முடித்தனர். ஆனால் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவ-மாணவிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்தது என்ற புகார் எழுந்தது. வட மாநிலங்களில் வினாத்தாள் கசிந்தது தொடர்பான புகாரில், விசாரணை நடத்தப்பட்டு அது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, 22 லட்சம் பேர் எழுதியிருந்த நீட் தேர்வை ரத்துசெய்யப்படுகிறது என்று மத்திய அரசு கடந்த மாதம் 12-ந்தேதி அறிவித்தது.
இதனால், இரவு-பகல் பாராமல் கண்விழித்து தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும், மீண்டும் மறுதேர்வுக்கு தயாரானார்கள். தேசிய தேர்வு முகமை மறுதேர்வு ஜூன் 21-ந்தேதி நடைபெறும் என அப்போது அறிவித்தது.
ஒரு சிலர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த பேரும் தண்டிக்கப்படும் சூழல் எழுந்தது. எனினும், மறுதேர்வுக்கு மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்த தொடங்கினர். நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சியை தொடர்ந்தனர்.
இந்த சூழலில், கடந்த முறை நடந்த தவறு மீண்டும் நடந்து விடாமல் தடுக்க, மத்திய பாதுகாப்பு படை உதவியுடன் வினாத்தாள்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு வந்து சேர்ந்தன. அரசு பொதுத்துறை வங்கிகளில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியாவில் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம் 5 ஆயிரத்து 440 தேர்வு மையங்களில் சுமார் 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கி நடந்தது.
இந்த நிலையில், நீட் மறுதேர்வுக்கான வினாத்தாளும் கசிந்துள்ளது என்று வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், டெலிகிராமில் நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு முன்பே கசிந்துள்ளது என்று தகவல் தெரிவித்தது. இது மாணவ மாணவிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், இது போலியானது என தேசிய தேர்வு முகமை, எக்ஸ் வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், நீட் மறுதேர்வு விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் நடத்தப்பட்டது. அது வெற்றியும் அடைந்துள்ளது. நீட் மறுதேர்வு தொடர்பாக போலியான வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பரவி வருகிறது என்ற செய்தி எங்களுடைய கவனத்திற்கு வந்துள்ளது. அந்த வீடியோ போலியானது. அது கூறும் தகவலும் போலியானது என்று தெரிவித்து உள்ளது.
இதுபோன்ற தவறான தகவல்களை தயாரித்து, உள்நோக்கத்துடன் பரப்பி விடுவது, மாணவர்களுக்கு மோசடி செய்வது அல்லது அவர்களுக்கு தவறான தகவலை பரப்பி விடுவது போன்றவை தீவிர குற்றம் ஆகும்.
பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் எங்களுடைய முகமையின் பரிசோதிக்கப்பட்ட சமூக ஊடகங்களின் தகவல்களை மட்டுமே பார்க்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. இதன்படி, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அமைதியான மற்றும் வெளிப்படையான முறையில் நடந்த மறுதேர்வை எழுதியுள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.