பெருநிறுவனங்களின் கடன் தள்ளுபடியை தடுக்க சட்டம் வேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்


பெருநிறுவனங்களின் கடன் தள்ளுபடியை தடுக்க சட்டம் வேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்
x

சாமானியர்களுக்கான கடன்களை ஏன் மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை என்று கெஜ்ரிவால் கேள்வி ஏழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் டெல்லியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், பெருநிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் கூறியதாவது,

ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பெருநிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் மத்திய அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. இத்தகைய நடைமுறைகள் சாமானியர்கள் மீது அதிகப்படியான வரிச்சுமையைத் திணிக்கிறது.

பணக்காரர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் அதேவேளையில், சாமானிய மக்கள் தங்களின் வருமானத்தில் பாதியை வரியாக செலுத்துகின்றனர். மத்திய அரசு ஏன் வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்ற சாமானியர்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்யவில்லை?. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடியைத் தடைசெய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பணக்காரர்களுக்கான கடன் தள்ளுபடிகளை நிறுத்துவது, அரசுக்கு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி-யை பாதியாக குறைக்கவும், வரி வருமான வரம்பை இரட்டிப்பாக்கவும், அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை நீக்கவும் வழிவகை செய்யும். பணக்கார்களுக்கான கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய ஊழல், அதனை நிறுத்துவதற்கான நேரம் இது." இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story