பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

அவருடைய உடலுக்கு, மும்பை போலீசாரின் பாரம்பரிய முறைப்படி துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது.
பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
Published on

மும்பை

மராட்டியத்தின் மும்பை நகரில் வசித்து வந்த பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவுக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக தென்மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாடகி ஆஷா போஸ்லே நேற்று காலமானார். அவருக்கு வயது 92. ஆஷா போஸ்லேவின் மறைவு செய்தியை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதி செய்ததுடன், அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் என்றும் கூறினார்.

80 ஆண்டுகளாக மக்களை தன்னுடைய இனிய குரலால் வசீகரித்த அவருடைய உடல், மூவர்ண கொடி போர்த்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டு இருந்தது. ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரை துறை மற்றும் இசை துறையை சேர்ந்த பலரும் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். இதேபோன்று அவருக்கு பொதுமக்களும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தி சென்றனர்.

இதன்பின்னர், மராட்டியத்தின் மும்பை நகரில் சிவாஜி பூங்காவில் உள்ள தகன மேடைக்கு, பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அவருடைய உடலுக்கு, மும்பை போலீசாரின் பாரம்பரிய முறைப்படி துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது.

தொடர்ந்து, அவருடைய உடலுக்கு ஆஷா போஸ்லேவின் மகன் ஆனந்த் தீ மூட்டினார். அப்போது பாடகர்கள் ஷான் மற்றும் சுதேஷ் போஸ்லே ஆகியோர் இசை அஞ்சலியையும் செலுத்தினர். அப்போது மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பல்வேறு மூத்த அரசியல் தலைவர்களும் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com