மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை தகர்த்த பா.ஜ.க.

பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி கண்டது. இதில் பா.ஜ.க. மட்டும் 88 இடங்களை கைப்பற்றியது.
மும்பை,
மராட்டியத்தில் மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் 227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சி நாட்டிலேயே பணக்கார மாநகராட்சியாக அறியப்படுகிறது. காரணம், இங்கு இந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மதிப்பு ரூ.74 ஆயிரம் கோடியாகும். இது சில சிறிய மாநிலங்களின் பட்ஜெட் மதிப்பை விட அதிகம்.
இதனால் மும்பை மாநகராட்சியை கைப்பற்ற கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவியது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக ஒன்றுப்பட்ட சிவசேனா அதிகாரம் செலுத்தி வந்தது. கடந்த 2022-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இரு அணிகளாக உடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியின் பெயர், சின்னம் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வசம் வந்தது. உத்தவ் சிவசேனா என்ற பெயரில் உத்தவ் தாக்கரே கட்சி நடத்தி வருகிறார்.
இந்த தேர்தலில் பா.ஜனதாவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதேபோல சுமார் 20 ஆண்டு காலம் அரசியல் எதிரிகளாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி வைத்தனர். காங்கிரஸ் கட்சி, வஞ்சித் பகுஜன் அகாடி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. இதனால் தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது.
தாக்கரே ஆதிக்கத்தை தகர்த்த பாஜக
இந்தநிலையில் 114 வார்டுகளில் வெற்றிபெறும் கூட்டணி, நாட்டின் பணக்கார மும்பை மாநகராட்சியை கைப்பற்றும் என்ற நிலையில், தேர்தல் முடிந்து நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது, பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி கண்டது. இதில் பா.ஜனதா மட்டும் 88 இடங்களை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 28 இடங்களில் வெற்றி பெற்றது.
உத்தவ் சிவசேனா 65 வார்டுகள், நவநிர்மாண் சேனா 8 வார்டுகள் என இந்த கூட்டணி கட்சிகள் 73 இடங்களை பிடித்து தோல்வியை தழுவியது. காங்கிரஸ் வெறும் 14 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணி மும்பை மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. இங்கு முதன் முறையாக பா.ஜனதா மேயர் பதவி ஏற்க உள்ளார். 25 ஆண்டு காலம் மாநகராட்சியை தன்வசப்படுத்தி வைத்திருந்த தாக்கரேக்களின் கொடி மும்பை மாநகராட்சி கோட்டையில் இருந்து இறக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் தாக்கரேக்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி மாநகராட்சியை தங்கள் கூட்டணி கைப்பற்றியதால் பா.ஜனதாவினர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். வெற்றியை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர்.
இதேபோல துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் செல்வாக்கு மிகுந்த தானே மாநகராட்சியிலும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. இங்கு சிவசேனா அதிக வார்டுகளில் வெற்றி பெற்று இருப்பதால், அக்கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்பட உள்ளது. முதல்-மந்திரி தேவந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோரின் சொந்த ஊர் உள்ள நாக்பூர் மாநகராட்சியையும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி மீண்டும் கைப்பற்றி உள்ளது.
பாஜக அபார வெற்றி
மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளில் பா.ஜனதா கூட்டணி 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளில் அபார வெற்றி கண்டுள்ளது. ஆனால் 25 மாநகராட்சிகளில் பா.ஜனதா மேயர் பதவி ஏற்பார்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். காங்கிரஸ் கட்சி லாத்தூர், சந்திராப்பூர், பிவண்டி, பர்பானி, கோலாப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த மாநகராட்சிகளின் மேயர் பதவியை காங்கிரஸ் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. உத்தவ் சிவசேனா, ராஜ்தாக்கரே கட்சிகளின் கூட்டணியால் ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற முடியவில்லை.






