மும்பை: வீட்டின் மீது கட்டப்பட்ட மேம்பாலத்தால் சர்ச்சை

மும்பையில் வீட்டின் மீது மேம்பாலம் கட்டப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் இந்தோரா-திகோரி இடையே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள அசோக் சதுக்கம் பகுதியில் ஒரு வீட்டின் மீது செல்லும் வகையில் பாலம் கட்டுப்பட்டு இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மேலும் இது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆனால் மேம்பாலம் செல்லும் கட்டிடப்பகுதி ஆக்கிரமிப்புக்குரியது என்றும், அதை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. விரைவில் ஆக்கிரமிப்பு கட்டிடப்பகுதி அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் ஆக்கிரமிப்பு இல்லை என்று வீட்டின் உரிமையாளர் கூறுகிறார். இது தொடர்பாக அவர், “நெடுஞ்சாலைத்துறை கூறுவது போல எனது வீட்டின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படவில்லை. எனவே அதை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனது வீட்டின் மீது மேம்பாலம் செல்வதால் பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை” என்றார். மொத்தத்தில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.






