டெல்லியில் பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

மக்களவை தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாகவும், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்டிஏ தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

மத்தியில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க பா.ஜனதா முடிவு செய்துள்ள நிலையில், இக்கூட்டம் மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com