இஸ்லாமிய பெண்கள் குறை தீர்க்க வக்பு வாரியத்தில் புதிய நடைமுறை

வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட் களில் குறைதீர்வு நடைமுறை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்கள் குறை தீர்க்க வக்பு வாரியத்தில் புதிய நடைமுறை
Published on

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் இஸ்லாமிய பெண்கள் குறைதீர்க்க வக்பு வாரியம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

சுற்றறிக்கை

புதுவையில் உள்ள அனைத்து வக்பு பள்ளிவாசல் முத்தவல்லிகள் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து வக்பு பள்ளி வாசல்கள் மற்றும் மஹல்லாக்களில் பெண்கள் தொடர்பான குடும்ப, சமூக மற்றும் மஹல்லா நிர்வாக குறைகள் முறையாகக் கேட்டு, அவற்றிற்கு சமரசமான மற்றும் விரைவான தீர்வு காணும் நோக்கில் புதுச்சேரி மாநில வக்பு வாரியம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துகிறது.

குறை தீர்வு

பள்ளிவாசல் நிர்வாகங்கள் பெரும்பாலும் ஆண்களால் நிர்வகிக்கப்படுவதால், பெண்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க தயக்கம் அல்லது சிரமம் எதிர்கொள்ளும் நிலை இருப்பது வக்பு வாரியத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பெண்கள் தங்களது குறைகளை பாதுகாப்பான மற்றும் மரியாதையான சூழலில் தெரிவிக்க இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. புதுச்சேரி அரசால் நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநில வக்பு வாரியத்தின் 2 பெண் உறுப்பினர்கள், வக்பு வாரியத் தலைவரின் ஆலோசனையின் பேரில், பெண்களின் குறைகளைப் பெற்று கலந்துரையாடல் மற்றும் சமரசம் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து, வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை குறைதீர்வு நடைமுறை நடைபெறும்.

புதுச்சேரி மாநில வக்புவாரிய அலுவலகத்தில் பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள். மஹல்லாவில் தீர்வு காண இயலாத பெண்கள் தொடர்பான குறைகள் அல்லது குடும்ப பிரச்சினைகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வரலாம் அல்லது எழுத்து மூலமாக மனு அளிக்கலாம்.

ஒத்துழைப்பு தர வேண்டும்

பெறப்படும் மனுக்கள் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டு, தேவையான தரப்பினரை அழைத்து கலந்துரையாடல் மற்றும் சமரசம் மூலம் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, அனைத்து வக்பு பள்ளிவாசல் முத்தவல்லிகள் மற்றும் நிர்வாகக் குழுக்கள் இதனை மஹல்லா மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பெண்கள் வக்பு வாரியத்தை அணுகுவதற்கு உரிய ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com