யுபிஐ செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் இன்று முதல் அறிமுகம்

யுபிஐயில் நடைபெறும் சில முறைகேடுகளை தவிர்க்க மத்திய அரசு அவ்வப்போது புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
யுபிஐ செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் இன்று முதல் அறிமுகம்
Published on

சென்னை,

டிஜிட்டல் முறையில் தற்போது வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்துவிட்டது. பணம் அனுப்புவதற்கும் டெபாசிட் செய்வதற்கும் வங்கிகளுக்கு சென்று கால்கடுக்க நின்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது எனச் சொல்லும் அளவிற்கு தற்போது நிலைமை மாறிவிட்டது. வங்கி பக்கமே போகாமல் பணப் பரிவர்த்தனையை செல்போன் மூலமே செய்து முடித்துவிடலாம். ஆன்லைன் ஷாப்பிங் முதல் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்புவது வரை சில நொடிகளில் அனுப்பும் வசதி வந்துவிட்டது. அதிலும் யுபிஐ வந்த பிறகு பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்திலும் எளிதாக பேமென்ட் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் யுபிஐயில் சில முறைகேடுகளும் நடைபெறுகின்றன. இவற்றை தவிர்க்க மத்திய அரசு அவ்வப்போது புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தவறுதலாக வேறு நபர்களுக்குப் பணம் அனுப்புவதைத் தடுக்கும் பொருட்டு, தேசிய கொடுப்பனவுக் கழகம் இன்று முதல் புதிய பாதுகாப்பு அம்சத்தைக் கட்டாயமாக்குகிறது.

இதன்படி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் ஒருவருக்குப் பணம் அனுப்பும்போது, பயனர்கள் தங்களது ‘யுபிஐ பின்' (UPI PIN) எண்ணை உள்ளிடுவதற்கு முன்பாகவே, பணம் பெறுபவரின் வங்கிக் கணக்கில் உள்ள அதிகாரப்பூர்வமான அசல் பெயர் திரையில் தோன்றும். இதன் மூலம் தவறான நபர்களுக்குப் பணம் மாறுவது முற்றிலும் தடுக்கப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com