தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
Published on

பெங்களூரு

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா - தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

3,500 கன அடி தண்ணீர்

இதனிடையே, டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து 29-ந்தேதி முதல் (நேற்று) தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது.

ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை. கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலை தற்போது இல்லை என அம்மாநில அரசு கூறி வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில், கர்நாடக அரசு முறையீடு செய்தது.

ஆணையம் உத்தரவு

இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com