

காந்திநகர்,
குஜராத்தில் அரசு சார்பில் இயங்கி வரும் மருத்துவமனைகளில், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கவனிக்கும் தனிப்பிரிவும் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் இறந்துள்ளதாக புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை மாநில துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல், கேள்வி நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பச்சிளங்குழந்தைகள் நோய்ப் பாதுகாப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட 1,06,017 குழந்தைகளில், 13,496 குழந்தைகள் மரணமடைந்துள்ளார். இது சராசரியாக ஒருநாளைக்கு 18 குழந்தைகள் என்ற அளவில் வரும். அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 69,314 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் இருந்தும், 38,561 குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் நோய்ப் பாதுகாப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேசமயம் தேவ்பூமி துவாரகா, போட்டாட், ஆனந்த், ஆரவல்லி மற்றும் மஹிசாகர் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் உள்ள பச்சிளங்குழந்தைகள் நோய்ப் பாதுகாப்பு பிரிவில் ஒரு குழந்தை கூட மரணம் அடையவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.