

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லி, மராட்டியம் போன்ற மாநிலங்களில் இந்த தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல விமானப் படையும் உதவி செய்து வருகிறது.
இதனிடையே இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றை சமாளிக்க ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன், ஜெனரல் பிபின் ராவத் ஆலோசனையில் ஈடுபட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஆக்சிஜன் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்வதற்காக விமானப்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் பிரதமர் கேட்டறிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.