

புதுடெல்லி
பாகிஸ்தான் வான்வெளி தடையை அடுத்து, சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், நேபாளி ஒருவர் உள்பட அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, லஷ்கர்-இ-தொய்பா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் தொடர்பு பற்றி தெரிய வந்தது.
அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத துணை அமைப்பு தாக்குதலில் ஈடுபட்டிருந்தது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மே 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது.
இதில், முசாபராபாத், கொத்லி, பஹவல்பூர், ராவலகோட், சக்ஸ்வரி, பிம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சக்வால் ஆகிய 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய பாதுகாப்பு படைகள் சார்பில் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் அவை முற்றிலும் தரைமட்டம் ஆக்கப்பட்டன. இவற்றில், 4 இடங்கள் பாகிஸ்தானிலும், 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருந்தன.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 22-ந்தேதி முதல், பாகிஸ்தான் தொடர்புடைய விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது. அவை இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பாகிஸ்தானும் அந்நாட்டின் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்தது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.
பாகிஸ்தானின் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்த நிலையில், சீனாவின் ஜின்ஜியாங் வான்வெளி பகுதியை பயன்படுத்தி கொள்வது தொடர்பாக அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்படி, சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் ஹோதன் என்ற இடத்தின் மேலே உள்ள வான்வெளியின் வழியே இந்திய விமானங்கள் பறந்து செல்வது தொடர்பான அனுமதிக்காக மத்திய அரசு பேசி வருகிறது.
இதற்காக மத்திய வெளிவிவகார அமைச்சகம், சீனாவின் தொடர்புடைய அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது. ஓராண்டாக இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விமான பயண நேரம் மற்றும் தேவையற்ற செலவு ஆகியவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.