புதுச்சேரி சிறையில் பரபரப்பு: கைதிகளுக்கு காம்பவுண்ட் சுவர் வழியாக செல்போன் வீசிய ரவுடிகள்

சிறைக்கு வெளியில் இருக்கும் இவர்களது கூட்டாளிகள், அங்கிருந்தபடியே இந்த செல்போன் மற்றும் சார்ஜர்களை சிறைக்குள் வீசியது தெரியவந்தது.
புதுச்சேரி சிறையில் பரபரப்பு: கைதிகளுக்கு காம்பவுண்ட் சுவர் வழியாக செல்போன் வீசிய ரவுடிகள்
செல்போன்
Published on: 

புதுச்சேரி,

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் காம்பவுண்ட் சுவர் வழியாக கைதிகளுக்கு செல்போன் மற்றும் சார்ஜர்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சிறைச்சாலை

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என 1200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் கைதிகள் ரகசியமாக செல்போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திடீர் சோதனை

இதனை தொடர்ந்து, ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான சிறை வார்டன்கள் மற்றும் காவலர்கள் சிறை வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கைதிகள் தங்கியிருக்கும் அறைகள் மற்றும் வளாகத்தின் அனைத்து பகுதிகளும் அங்குலம் அங்குலமாக சோதிக்கப்பட்டன.

செல்போன் பறிமுதல்

அப்போது, விசாரணை கைதிகள் தங்கும் வளாகத்தின் உள் சுவருக்கும், வெளி காம்பவுண்ட் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பிரித்து பார்த்தபோது, அதனுள் ஒரு செல்போன் மற்றும் 4 சார்ஜர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர்.

ரவுடிகள் கைவரிசை

இது தொடர்பாக சிறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் சார்ஜர்களை பதுக்கி வைத்திருந்தது விசாரணை கைதிகளான கார்த்திகேயன், சூர்யா மற்றும் அப்துல் நசீர் என்பது அம்பலமானது. மேலும், சிறைக்கு வெளியில் இருக்கும் இவர்களது கூட்டாளிகளான ரவுடிகள், காம்பவுண்ட் சுவருக்கு வெளியில் இருந்து இந்த செல்போன் மற்றும் சார்ஜர்களை சிறைக்குள் வீசிய அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இந்த விதிமீறல் சம்பவம் குறித்து ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், சிறைக்குள் செல்போன் பதுக்கிய கைதிகள் கார்த்திகேயன் உட்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் புதுச்சேரி சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X