

திஸ்பூர்,
அசாம் மாநில சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக, இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. அசாம் சட்டமன்ற சபாநாயகர் ரஞ்சித் குமார் தாஸ் தலைமையின் கீழ் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அசாம் மாநில சட்டமன்றத்தின் 16-வது பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 6-ந்தேதி(இன்று) தொடங்க உள்ளது. இந்நிலையில், அசாம் சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக, இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அசாம் சட்டமன்றத்தில் அசாமிய மொழி, ஆங்கிலம் மற்றும் போடோ ஆகிய மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன.
இந்நிலையில், தற்போது இந்தி மொழியும் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளதால், இன்று முதல் அசாம் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் இந்தியில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அசாம் சட்டமன்ற சபாநாயகர் ரஞ்சித் குமார் தாஸ் தலைமையின் கீழ் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று ரஞ்சித் குமார் தாஸ் தலைமையில் நடைபெற்ற அசாம் சட்டமன்றத்தின் 'பொது நோக்கக் குழு' (General Purpose Committee) கூட்டத்தில் இந்தி மொழியை அறிமுகப்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், “சட்டமன்றத்தில் இந்தி மொழியை அறிமுகப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். முன்னதாக இங்கு அசாமிய மொழி, ஆங்கிலம் மற்றும் போடோ ஆகிய 3 மொழிகள் பயன்பாட்டில் இருந்தன. இப்போது முதன்முறையாக இந்தி மொழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தி ஒரு தேசிய மொழி ஆகும். அதற்கு மதிப்பளிக்கும் விதமாகவே இந்தி மொழியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். மேலும், அசாம் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்யும் 'ஏஎல்ஏ' (ALA - Assam Legislative Assembly) என்ற தொலைக்காட்சி சேனலின் பெயர், திங்கட்கிழமை(இன்று) முதல் 'அசாம் விதான் சபா டிவி' (Assam Vidhan Sabha TV) எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஜூலை 6-ஆம் தேதி அசாம் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 21 பணி நாட்களில் நடைபெற்று, ஜூலை 31-ந்தேதி நிறைவடையும். மாநில பட்ஜெட் ஜூலை 10-ந்தேதி தாக்கல் செய்யப்படும். கூட்டத்தொடரில் 10 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன” என்று அசாம் சட்டமன்ற சபாநாயகர் ரஞ்சித் குமார் தாஸ் தெரிவித்தார்.