புதிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக 14ந் தேதி ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழு ஆலோசனை நடத்துகிறது
புதிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக 14ந் தேதி ஆலோசனை
Published on

புதுடெல்லி,

தேர்தல் கமிஷனில், தலைமை தேர்தல் கமிஷனர், 2 தேர்தல் கமிஷனர்கள் பணியிடங்கள் உள்ளன. தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே, 65 வயதை எட்டியதால் கடந்த மாதம் 14-ந் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனராக இருந்த அருண் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டது. அருண் கோயல் பதவிக்காலம், 2027-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதிவரை இருக்கிறது. அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமை தேர்தல் கமிஷனராக பதவி உயர்வு பெற இருந்தார். அதற்குள் ராஜினாமா செய்து விட்டார்.

அதனால் தற்போது தேர்தல் கமிஷனில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மட்டுமே இருக்கிறார். 2 தேர்தல் கமிஷனர் பணியிடங்களும் காலியாக உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் நேரத்தில் 2 காலியிடங்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் சர்ச்சை ஆக்கின. இந்நிலையில், மார்ச் 15-ந் தேதிக்குள் 2 புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக 14ந் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிதாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டப்படி, மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் தலைமையிலான குழு, 2 காலியிடங்களுக்கு தலா 5 அதிகாரிகள் கொண்ட 2 உத்தேச பட்டியலை தயாரிக்கும். அந்த பட்டியலை பிரதமர் மோடி, மத்திய மந்திரி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவிடம் சமர்ப்பிக்கும்.

தேர்வுக்குழு, வருகிற 14-ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 2 புதிய தேர்தல் கமிஷனர்களை தேர்ந்தெடுத்து ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும். அவர்களை ஜனாதிபதி 15-ந் தேதிக்குள் நியமிப்பார் என்று கூறப்படுகிறது. 

மார்ச் 14 ம் தேதி நண்பகல் 12 மணிக்கு கூட்டத்தை நடத்துவதற்கு சட்ட அமைச்சகம் அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com