

பெங்களுரு,
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.மொத்தம் 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமயிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துனை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி வகித்து வருகிறார். சித்தராமையா, சிவகுமாருக்கு தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. ஆனால் சித்தராமையா இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை டி.கே.சிவக்குமாருக்கு தரவில்லை.
இதனால் டி.கே.சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுடெல்லியில் முகாமிட்டு சித்தராமையா மாற்ற வேண்டும் என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் இரு தரப்பையும் சமதானப்படுத்தியது. இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமயிலான காங்கிரஸ் அரசு அடுத்த மாதம் 20-ம் தேதியுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் மந்திரி பதவி கேட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போர்கொடி தூக்கியுள்ளனர்.
ஆனால் ஆட்சி அமைந்து, 2 ஆண்டுகள் 11 மாதங்கள் ஆகியும் இதுவரை முதல்வர், அமைச்சர்கள் மாற்றம் நடக்கவில்லை. 'தற்போதைய அமைச்சர்கள், தங்களை மதிப்பது இல்லை; அவர்களை பார்ப்பதே அரிதாக உள்ளது' என்று, மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ,க்கள் அடிக்கடி புகார் கூறி வருகின்றனர்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புது டெல்லிக்கு விமானம் மூலம் வந்துள்ளனர். நேற்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் ஜெயசந்திரா, அசோக் பட்டன், சுப்பா ரெட்டி, புட்டரங்கஷெட்டி, ஹம்பனகவுடா பத்ரேலி, சாந்தனகவுடா, பசவராஜ் சிவண்ணவர், கிருஷ்ணமூர்த்தி, பிரசாத் அப்பய்யா, யு.பி.பனகர், ஜி.எஸ்.பாட்டீல், யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல், சடாக் ஷரி, நாராயணசாமி, லட்சுமண் சவதி, அப்பாஜி கவுடா, ரிஸ்வான் அர்ஷத், பிரியா கிருஷ்ணா, ரமேஷ் பண்டி சித்தே கவுடா, நரேந்திர சாமி, சிவண்ணா, வினய் குல்கர்னி, ராகவேந்திர ஹிட்னால் உட்பட 30 எம்.எல்.ஏ.,க்கள் மந்திரி பதவி கேட்டு புது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
வரும் 2028 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு முதல்-மந்திரி சித்தராமையாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் சரியாக செயல்படாத மந்திரிகளை நீக்கி விட்டு, தங்களை மந்திரிசபையில் சேர்ப்பது பற்றி கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி எம்.பி., கே.சி. வேணுகோபால் போன்ற முத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பதவி மாற்றம் குறித்து விவாதிக்க உள்ளனர். இந்த எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கு பாதி பேர்,சித்தராமையா மற்றும் சிவக்குமாரின் ஆதரவாளர்கள் ஆவார்கள்.
இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் புது டெல்லிக்கு வர தயாராகின்றனர். மேலும் முதல்முறை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் மந்திரி பதவி கேட்டு கடந்த மாதம் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி இருந்தனர். இதனால் அடுத்த மாதம் 4-ம் தேதி 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின் மந்திரிகள் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் முத்த எம்.எல்.ஏ.க்கள் இப்போது எப்படியாவது மந்திரி பதவியை வாங்க வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளனர். இதனால் எற்கனவே மந்திரியாக உள்ளவர்களிடம் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
முதல்-மந்திரி சித்தராமையாவை தன் பதவி பிரச்சனை தீர்ந்த நிலையில் இந்த பிரச்சனையால் குழப்பத்தில் உள்ளார்.