

புதுடெல்லி,
இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான 'ரமலான்' அல்லது 'ரம்ஜான்' மாதம், இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக திகழ்கிறது. இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது. ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். இந்த மாதத்தின் இறுதியில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் 'ஈத் அல்-பித்ர்' (Eid al-Fitr) எனப்படும் 'ரம்ஜான்' பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை நாடு முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாக பிறை சந்திரன் நேற்றிரவு தெரிந்தது. இதனை தொடர்ந்து இன்று காலையில் இருந்து, மசூதிகளுக்கு சென்ற அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். நன்றியுணர்வை பிரதிபலிக்கும் வகையில் சமூக மக்கள் ஒன்றாக திரண்டு தங்களுடைய அன்பை பகிர்ந்து கொண்டனர். அமைதி மற்றும் வளத்திற்காக வேண்டி கொண்ட அவர்கள், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மற்றும் அண்டை வீட்டாருடனும் கொண்டாட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதன்படி, டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜமா மசூதியில் இன்று காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இறை வணக்கத்தில் ஈடுபட்டனர். புனித ரம்ஜான் மாத நிறைவை குறிக்கும் வகையில், புதிய ஆடைகளை அணிந்து வந்து ஒற்றுமையாக தொழுகையில் ஈடுபட்டனர். மும்பையிலும், ஜுமா மஸ்ஜித் மஹிம் தர்காவில் மக்கள் திரளாக வந்து தொழுகை நடத்தினர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரம்ஜான் மாத நிறைவை முன்னிட்டு, நேற்று கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புதிய ஆடைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். கடைகளில் இனிப்பு, பலகாரங்கள் விற்பனையும் ஜோராக நடந்தது. தொண்டு, இரக்கம் உள்ளிட்டவற்றின் மீதுள்ள மதிப்புகளை மக்களிடையே மீண்டும் வலியுறுத்தும் வகையில் இந்த ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில், மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுதல் மற்றும் மற்றவர்களின் நலனில் கவனம் கொள்ளும் இஸ்லாமிய கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் உணவு, உடை வழங்குதல் மற்றும் ஆதரவற்றோருக்கு பலரும் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே, வளைகுடா நாடுகளில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. பிறை தெரிவதில் உள்ள மாறுபாடு காரணமாக இந்தியா, மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
முன்னதாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த சூழலுக்கு மத்தியில் நேற்று வளைகுடா நாடுகளில் அமைதியான முறையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையை நிறைவேற்றினர். லெபனான் நாட்டில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள மசூதியில் ஏராளமான மக்கள் திரண்டு அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர். இதே போல் கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளிலும் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
மேலும், போரால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த காசா மக்கள், வீதிகளில் திரண்டு ஈகைத் திருநாள் சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர். அதே சமயம், ஜெருசலேம் நகரில் உள்ள புகழ் பெற்ற அல்-அக்சா மசூதியில் தொழுகை நடத்துவதற்கு, பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, இஸ்ரேல் காவல்துறை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.