ஹேமந்த் சோரன் மந்திரிசபை விஸ்தரிப்பு ; 11 பேர் புதிதாக பதவியேற்பு


ஹேமந்த் சோரன் மந்திரிசபை விஸ்தரிப்பு ; 11  பேர்  புதிதாக  பதவியேற்பு
x
தினத்தந்தி 5 Dec 2024 5:08 PM IST (Updated: 5 Dec 2024 5:38 PM IST)
t-max-icont-min-icon

ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

ராஞ்சி,

ஜார்கண்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது. பாஜக 21 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து கடந்த மாதம் 28ம் தேதி ஹேமந்த் சோரன் முதல்-மந்திரியாக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த சுதிவ்ய குமார், தீபக் பிருவா, ராம்தாஸ் சோரன், சாம்ரா லிண்டா, யோகேந்திர பிரசாத், ஹபிஜுல் ஹசன் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவியேற்றனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீபிகா பாண்டே சிங், ஷில்பி நேஹா டிர்கி, இர்பான் அன்சாரி, ராதாகிருஷ்ண கிஷோர் ஆகிய 4 பேரும், ராஷ்டிர ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய் பிரசாத் யாதவும் மந்திரிகளாக பதவியேற்றனர்.

ராஜ்பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் கவர்னர் சந்தோஷ் காங்வார் அவர்களுக்கு பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார். சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக ஸ்டீபன் மராண்டி பதவியேற்புடன் பதவியேற்பு விழா தொடங்கியது.

1 More update

Next Story