

புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் அவ்வப்போது வானிலை திடீரென மாறி மக்களை சிரமத்திற்குள்ளாக்கிவிடும். அந்த வகையில் நேற்று திடீரென புழுதிப்புயல் வீசி டெல்லியையே கலங்கடித்து விட்டது. டெல்லியில் குளிர் ஓய்ந்து கடந்த சில வாரங்களாக வெயில் அடித்து வந்தது.
காற்றும் சிறிது இதமாக வீசி வந்ததால் வெயில் அவ்வளவாக தெரியவில்லை.இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென காற்று சூறாவளி போல சுழன்று வீசியது. இந்த காற்றால் புழுதி மேலே எழும்பி, எங்கும் ஒரே புழுதி மண்டலமாக காட்சி அளித்தது.
இந்த புழுதிப்புயலால் சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நிலை தடுமாறினார் கள். நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடியில் புழுதி பட்டு பார்வைத்திறனை மறைத்தது. இந்த புழுதிப்புயலுக்கு பிறகு சில இடங்களில் மழையும் பெய்தது. அப்போதும் காற்று வேகமாக வீசி மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியது. இந்த திடீர் வானிலை மாற்றத்தால் மக்கள் அவதியடைந்தனர். ஒட்டுமொத்தத்தில் இந்த புழுதிப்புயலால் டெல்லி சிறிது நேரம் ஸ்தம்பித்தே போனது.