ஐதராபாத்தில் மேலும் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்று அறிகுறி?

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது
எபோலா வைரஸ்
ஏஐ படம்
Published on

ஐதரபாத்,

காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த சூடான் நாட்டைச் சேர்ந்த மேலும் ஒருவர் ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் எபோலா வைரஸ் அச்சுறுத்தலுடன் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 20 வயதுக்கு மேற்பட்ட மாணவரான அந்த சூடான் நாட்டவர், தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை, காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், இன்று காலை அவருக்கு காய்ச்சல் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருடன் இருந்த நபர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிமை வார்டு

இதற்கு முன்னதாக, 35 வயதுடைய மற்றொரு சூடான் நாட்டவர் நேற்று ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தபோது, உடல் வெப்பநிலை பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்து. உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். முழங்கால் அறுவை சிகிச்சைக்காக ஐதராபாத் வந்திருந்த அந்த நபருக்கு காய்ச்சல் இல்லை என்றும், எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என இன்று காலை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், இருவரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் இன்னும் வரவில்லை. எபோலா நோயாளிகளுக்காக ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனிமை வார்டு ஒன்றை தெலங்கானா அரசு அமைத்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகள்

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இது காய்ச்சல், கடுமையான சோர்வு, தசை வலி மற்றும் சில நேரங்களில் உள் மற்றும் வெளி இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும். இது பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மூலம் மட்டுமே பரவுகிறது. ஆப்ரிக்காவின் காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவல் பதிவாகியுள்ளதன் அடிப்படையில், இதனை சர்வதேச பொது சுகாதார அவசரநிலை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com