

புதுடெல்லி,
தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர முழுமையாக வழங்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் என்ற கணக்கீட்டில் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், மேலாண்மை ஆணையமும் கூடி, தண்ணீர் திறப்பு பற்றி விவாதிக்கின்றன.
இந்த நிலையில் ஆணையத்தின் 61-வது கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்திற்கு வர வேண்டிய நீர்ப் பங்கை முறையாக வழங்காமல் கர்நாடகா இழுத்தடித்து வரும் சூழலில், இன்றைய தினம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு மிக முக்கியமான கவனத்தைப் பெற்றிருக்கிறது.ஏற்கனவே தமிழகத்தில் எல் நினோ மற்றும் முறையற்ற பருவமழை ஆகிய காரணங்களால் பயிர்ச் சேதம் ஏற்பட்டு விளைச்சல் குறைந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஆகியவை தலைவிரித்தாடுகின்றன. இப்படிப்பட்ட சூழலில்காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.