

நகரி,
ஆந்திர பிரதேசத்தில் 16 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 'மெகா டி.எஸ்.சி.-2025' தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. தேர்வு முடிவு வெளியானபோது, வினாத்தாள் தயாரிப்பு மற்றும் ஆன்லைன் பதிவேற்றப் பணியில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர் நவீன், சமூக அறிவியல் தேர்வில் முதலிடம் பெற்றதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு எழுந்தது.
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் டெல்லி மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, ஆந்திராவில் இவ்விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகனும், அம்மாநில கல்வித்துறை மந்திரியுமான நாரா லோகேஷ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில், ஆசிரியர்கள். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு தெரிவித்தது.
திருப்பதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா, ஆசிரியர் தேர்வில் வினாத்தாள் கசிவு சர்ச்சை காரணமாக கல்வி மந்திரி நாரா லோகேஷ் பதவி விலக வேண்டும் என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.