

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை நாளில் பொதுவாக விசாரணை நடத்துவது இல்லை. சிறப்பு நிகழ்வாகத்தான் அவ்வப்போது விடுமுறை நாளில் விசாரணை நடத்தி இருக்கிறது.
அந்த வகையில், இந்த ஆண்டில் 3 முறை சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை நாளில் விசாரணை நடத்தி உள்ளது.
முதலில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி சனிக்கிழமை விடுமுறை நாளில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரது முன்னாள் பெண் ஊழியர் கூறிய பாலியல் புகார் மீது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோரை கொண்ட சிறப்பு அமர்வு அவசர விசாரணை நடத்தியது.
2-வதாக கடந்த 9-ந் தேதி சனிக்கிழமை விடுமுறை நாளில், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக திகழ்ந்து வந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் வழங்கப்பட்டது.
3-வது நிகழ்வாக நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில், மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு அமைய கவர்னர் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.