

புதுடெல்லி,
தேசிய ஜனநாயக கூட்டணி முதல் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “கடந்த 12 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்த சாதனைகளின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், உலகளாவிய நிலையற்ற தன்மை மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவை நிகழ்த்தப்பட்டுள்ளன. நிலையான அரசின் நன்மைகளை இந்த காலகட்டம் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. உலகம் முழுவதும் குழப்பமும் நெருக்கடியும் நிலவியபோதும், இந்தியா அந்த சவால்களை எதிர்கொண்டு முன்னேறியது. உலகின் பல பெரிய நாடுகளின் பொருளாதாரங்கள் சவால்களை சந்தித்து வரும் நிலையில், 2025-26 நிதியாண்டில் இந்தியா 7.7 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.மேலும், கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருந்தது.
12 ஆண்டுகளில் இவ்வளவு சாதிக்க முடிந்திருந்தால், அதற்கு முந்தைய பல தசாப்தங்களில் ஏன் அது நடைபெறவில்லை? இதுவே காங்கிரஸ் ஆட்சிக் கால வளர்ச்சி விகிதத்திற்கும், என்.டி.ஏ. ஆட்சிக் கால வளர்ச்சி விகிதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை காட்டுகிறது. ஒரு நிர்வாக முறை மக்களை காத்திருக்க வைத்தது; ஆனால் இன்றைய நிர்வாக முறை முடிவுகளை வழங்குகிறது. ஒரு நிர்வாக முறை பணிகளை தாமதப்படுத்தி தடம் புரளச் செய்தது;
ஆனால் இன்றைய நிர்வாக முறை பணிகள் குறிப்பிட்ட காலத்தில், மிகப் பெரிய அளவில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்கிறது. 2014 முதல் 2026 வரையிலான இந்தியாவின் பயணம் என்பது வெறும் புள்ளிவிவரங்களின் கதை அல்ல. அது தனது முழுத் திறனுடன் முதல் முறையாக ஓடத் தொடங்கிய இந்தியாவின் கதை. உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்காக அயராது உழைக்கும் இந்தியாவின் கதை” என்றார்.