

கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் அவமதித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. ரேகா பத்ரா. இவர் ஹிங்கல்கஞ்ச் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவர் விஷம் குடித்து விட்டதாகக் கூறி அதிகாலை உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்ததாக அவரது குடும்பத்தினர் ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருக்கு அந்த மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் பின்னர் கொல்கத்தாவில் உள்ள அதிநவீன வசதிகள் கொண்ட ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளுக்கான மருந்துகள் மற்றும் ஆன்டிபயாட்டிக்கள் உள்ளிட்ட சிகிச்கைகளை அளித்தனர்.
ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. ரேசுா பத்ரா விஷம் அருந்தியதைத் தொடர்ந்து அவரது வயிற்றில் இருந்த நச்சுப் பொருளை அகற்ற மூக்குவழியாக குழாய் செலுத்தி அவை வெளியேற்றப்பட்டன.
சில நாட்களுக்கு முன்பு ரேகா பத்ரா எம்.எல்.ஏ. பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் மீது தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைக்கவில்லை என்றும், தனது கல்வித் தகுதி குறித்து பொதுநிகழ்ச்சிகளில் அவர்கள் தன்னை அவமதித்ததாகவும் குற்றம்சாட்டினார். இதனால், கட்சியில் தனக்கு ஏற்பட்ட அவமானம் மற்றும் புறக்கணிப்பு குறித்து அவர் தொடர்ந்து மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
சந்தேஷ்காலி பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, சித்திரவதை மற்றும் நில அபகரிப்பு சம்பவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி மக்களின் கவனத்தை ரேகா பத்ரா பெற்றார். கடந்த 2024 ஆம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலம் பசிர்ஹாட் தொகுதியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
அதில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் ஹிங்கல்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம். எல்.ஏ. ஆனார். இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மேற்குவங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.