

புதுடெல்லி,
தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்சுன் கேவட். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லியின் பிரேம் சந்த் பார்க் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அனிதா (27 வயது). இவர்களுக்கு ஐந்து, நான்கு மற்றும் மூன்று வயதில் 3 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த சூழலில் மீண்டும் கருவுற்ற அனிதா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அனிதா மற்றும் 3 பெண் குழந்தைகளும் வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் முன்சுன் கேவட், தனது மனைவி மற்றும் மகள்களுக்கு போதை மருந்து கொடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கு திருமணத்தை மீறிய உறவு காரணமா அல்லது ஆண் குழந்தை இல்லாதது காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய முன்சுன் கேவட்டை தேடி வருகின்றனர்.