பேச்சுவார்த்தைக்காக ரஷியா வந்த துருக்கி அதிபரை அவமதித்தாரா புதின்?

பேச்சுவார்த்தைக்காக ரஷியா வந்த துருக்கி அதிபரை புதின் அவமதித்தாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
Published on

மாஸ்கோ,

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைக்கும் இடையே உச்சகட்ட மோதல் நீடிக்கிறது. இதில் சிரியா அரசு படைக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது.

இது தொடர்பாக ரஷியாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் இத்லிப் மாகாணத்தில் நடத்திவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென ரஷியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இதையடுத்து, கடந்த 5-ந்தேதி ரஷியா சென்ற தயீப் எர்டோகன் அந்த நாட்டு அதிபர் புதினை நேரில் சந்தித்து சிரியா விவகாரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

அதன் முடிவில் இத்லிப் மாகாணத்தில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் இத்லிப் மாகாணத்தில் தாக்குதல் நடத்துவதை ரஷியா நிறுத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், சிரியா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த துருக்கி அதிபர் எர்டோகனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் புதின் அவரை காக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகைக்கு வந்த துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அந்த நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளை புதின் இருந்த அறைக்குள் உடனடியாக அனுமதிக்காமல் கதவுக்கு அருகே நிற்கவைத்தனர். சுமார் 1 நிமிடம் அப்படியே நின்று கொண்டிருந்த எர்டோகன் பின்னர் அங்கு கிடந்த நாற்காலியில் அமர்ந்தார். சரியாக 2 நிமிட காத்திருப்புக்கு பிறகு அவர் அந்த அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.

எர்டோகன் அதிகாரிகளுடன் அறைக்கு வெளியே காத்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com