கல்லக்குடி, கல்குடியில் ஜல்லிக்கட்டு: 1,435 காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுகள் முட்டியதில் 34 பேர் காயம்

திருச்சி மாவட்டம் கல்லக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கல்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மொத்தம் 1,435 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்தனர்.
Published on

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் செல்லியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று ராஜாடாக்கீஸ் ஏரிக்கரை அருகே உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை செல்லியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, கோவில் மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். 244 மாடுபிடி வீரர்களுக்கும், 619 காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 வீரர்கள் உடல்தகுதி அடிப்படையில் நிராகரிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இதையடுத்து லால்குடி கோட்டாட்சியர் ராமன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 3 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் மற்றும் கல்லக்குடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் என மொத்தம் 619 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

17 பேர் காயம்

சீறிப்பாய்ந்த சில காளைகள், வீரர்களை நெருங்க விடாமல் நின்று விளையாடின. சில காளைகள் எல்லைக்கோட்டை நோக்கி விரைந்தன. இருப்பினும் வீரர்கள், காளைகளுடன் மல்லுக்கட்டி திமிலை பிடித்து அடக்கினர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 17 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள், கட்டில்கள், பீரோக்கள், சைக்கிள், மின் விசிறி, சில்வர் அண்டாக்கள், நாற்காலி என ரூ.7 லட்சம் மதிப்பில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டபீ. சிறந்த மாடுபிடி வீரராக திருமணமேடு சுகன் முதல் பரிசையும், சமயபுரம் தீபன் 2-ம் பரிசையும் பெற்றனர்.

தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது, லால்குடி தாசில்தார் சண்முகசுந்தரி மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பால்துரை தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவினர் செய்திருந்தனர். கல்லக்குடி பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், முத்துகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் ளபாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விராலிமலை

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கல்குடியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 816 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 171 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின.

காளைகள் முட்டியதில் 4 மாடுபிடி வீரர்கள், 13 பார்வையாளர்கள் என 17 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மேல்சிகிச்சைக்காக திருச்சி மாவட்டம் மணிகண்டம் மட்டபாறைப்பட்டியை சேர்ந்த வைத்தியலிங்கம் (வயது 23) என்பவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கும், திருச்சி ஆலம்பட்டி புதூர் கத்திக்காரன்பட்டியை சேர்ந்த வரதராஜ் (29) விராலிமலை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினரால் பரிசுகள் வழங்கப்பட்டன. விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com