கோவிலூரில் ஜல்லிக்கட்டு; 28 பேர் காயம்

கோவிலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 28 பேர் காயமடைந்தனர்.
Published on

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து கோட்டாட்சியர் தண்டபாணி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். பின்னர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 677 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 28 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் களமாவூரை சேர்ந்த ரகு உள்பட 7 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்க நாணயம், சைக்கிள், கட்டில், மிக்சி, சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, மோட்டார் சைக்கிள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை காண ஆலங்குடி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, ஆலங்குடி தாசில்தார் வரதராஜன் மற்றும் புதுக்கோட்டை, ஆலங்குடி சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சிங்கவள நாட்டு கிராமத்தார்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com