புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நீட் தேர்வை நடத்துவது குறித்து வல்லுநர் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான ஜே.இ.இ , நீட் நுழைவுத்தேர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.
தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் தேர்வுகளை நடத்துவது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வல்லுநர் குழு சமர்பித்தது.
இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டரில், மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து தரமான கல்வியை உறுதி செய்வதற்காக ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். ஜே.இ.இ முதன்மை தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெறும், ஜே.இ.இ மேம்பட்ட தேர்வு செப்டம்பர் 27 ம் தேதியும், நீட் தேர்வு செப்டம்பர் 13 ம் தேதியும் நடைபெறும் என்று பதிவிட்டுள்ளார்.