

புதுடெல்லி,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து தனது தடை பட்டியலில் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவேஷ்குமார் கூறியதாவது:
பாகிஸ்தான் மற்றும் இதர நாடுகளும் இப்போது 3 அடிப்படையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒன்று மசூத் அசாருக்கு நிதி உதவி செய்வது மற்றும் இதர நிதி தொடர்பான சொத்துகள் அனைத்தையும் முடக்க வேண்டும். இரண்டாவதாக வேறு எந்த நாடுகளுக்கும் செல்ல முடியாதபடி தடை விதிக்க வேண்டும். மூன்றாவதாக அவருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடை கமிட்டி கூறியுள்ளபடி சர்வதேச சமுதாயத்துக்காக இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு இப்போது பாகிஸ்தானிடம் உள்ளது. பாகிஸ்தான் சர்வதேச ஒப்பந்தப்படி தனது பகுதியில் இயங்கிவரும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் மீது உறுதியான, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது.
இந்த நடவடிக்கையில் இந்தியா சீனாவுடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பயங்கரவாதம் மற்றும் தேச பாதுகாப்பு தொடர்பான எந்த பிரச்சினை குறித்தும் வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
மசூத் அசார் மீது ஐ.நா. தடை விதிக்க வேண்டும் என்ற பிரச்சினையை முதல் முறையாக 2009ம் ஆண்டு எடுத்ததில் இருந்தே இதில் இந்தியா உறுதியாக இருந்தது. ஐ.நா.வின் இந்த அறிவிப்பு புல்வாமா தாக்குதல் போன்ற ஒரு குறிப்பிட்ட பயங்கரவாத தாக்குதலுக்காக வெளியிடப்படவில்லை.
மசூத் அசார் தொடர்புடைய பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விவரங்கள், ஆதாரங்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. எனவே மசூத் அசார் சம்பந்தப்பட்ட அனைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ளது.
வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இந்த பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை. அவர்கள் இந்த முடிவை வரவேற்கவோ, விமர்சிக்கவோ முடியாது. அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்கள் நாட்டில் விமர்சனம் எழுந்துள்ளது. அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, அந்த அறிவிப்பில் இருக்கும் சில ஓட்டைகளை (குறைகளை) கையில் எடுப்பது தான். ஆனால் நம்மை பொறுத்தவரை பாகிஸ்தான் கூறும் கருத்துகள் எல்லாம் பொருத்தமற்ற விவரங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.