சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது : நீதிபதிகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த சிறுவர்கள், நீதிபதிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
Published on

கார்டூம்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானின் டார்பர் பிராந்தியத்தில் உள்ள மேற்கு டார்பர் மாகாணத்தில் ஆப்பிரிக்க மற்றும் அரபு பழங்குடியின மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இந்த இரு குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் மேற்கு டார்பர் மாகாணத்தின் தலைநகர் அல் ஜெனீனாவில் ஆப்பிரிக்க மற்றும் அரபு பழங்குடியின மக்களுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு பயங்கர மோதல் வெடித்தது.

இந்த மோதலில் 48 பேர் பலியாகினர். சுமார் 250 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அல் ஜெனீனாவில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பிரதமர் அப்துல்லா ஹம்தோக், ராணுவ தளபதி முகமது ஹமதான் தாகலோ மற்றும் மூத்த அதிகாரிகள் அங்கு முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வன்முறையில் காயம் அடைந்த 3 நீதிபதிகள் மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 11 பேரை ஏற்றிக்கொண்டு ராணுவ விமானம் ஒன்று நேற்று காலை அல் ஜெனீனாவில் இருந்து புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட விமான ஊழியர்கள் 7 பேரும் இருந்தனர்.

புறப்பட்டு சென்ற 5 நிமிடத்தில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் விமானத்தில் பயணம் செய்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com