காஞ்சீபுரம்,
வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில், காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மினி மாரத்தான் போட்டியை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைத்து, கலந்து கொண்டார்.
இந்த மாரத்தான் ஓட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஸ்ரீதர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், வடமதுரை குறுவட்ட வருவாய்த்துறை சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும்வகையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, வருவாய் ஆய்வாளர் ரமணி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். மேலும், வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த பேரணி வடமதுரை பெருமாள் கோவில் அருகே இருந்து புறப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.