மக்கள் பிரச்சினைகளை பேசாமல் அபத்தமான விஷயங்களையே மோடி பேசுகிறார் - பிரியங்கா குற்றச்சாட்டு

மக்கள் பிரச்சினைகளை பேசாமல், அபத்தமான விஷயங்களையே மோடி பேசுவதாக பிரியங்கா குற்றம் சாட்டினார்.
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

பா.ஜனதா அரசு, வெறுப்பு, கோபம், எதிர்மறை சிந்தனை ஆகியவற்றை பரப்பி வருகிறது. பஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடியால், தனது பங்களாவை விட்டு, 5 நிமிடங்கள் வெளியே வந்து அவர்களிடம் குறை கேட்க முடியவில்லை.

இப்போது தேர்தல் வந்தவுடன், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் நிதி உதவி திட்டத்தை அறிவித்துள்ளனர். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யுமாறு காங்கிரஸ் கட்சி கேட்டபோது, பணம் இல்லை என்று கூறினார்கள். ஆனால், பெரும் தொழிலதிபர்களின் ரூ.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளனர். அதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது?

விவசாயிகளின் காப்பீட்டு பணம் என்ன ஆனது? விவசாயிகள் பரிதாப நிலையில் இருக்கும்போது, மோடியின் நண்பர்களின் கம்பெனிகள், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி உள்ளன.

ஆனால், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகள், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தன. நோக்கம் நன்றாக இருந்தால், 3 நாளில் கடனை தள்ளுபடி செய்ய தொடங்கி விடலாம். ஆனால், இவர்கள் மேடையில் பெரிதாக பேசி விட்டு, இறங்கி சென்று விடுகிறார்கள்.

ஜனநாயகம் அளித்த வாக்குரிமை என்ற அதிகாரத்தை மக்கள் மறந்துவிடக்கூடாது. அதனால்தான் நாங்கள் உங்களை தேடி வந்துள்ளோம்.

பிரதமர் மோடி உங்கள் முன்பு வந்தால், உங்கள் பிரச்சினைகளை பேசுவதில்லை. கடந்த காலத்தை பேசுகிறார். பாகிஸ்தானையும், அபத்தமான விஷயங்களையுமே பேசுகிறார். மக்கள் பிரச்சினைகளை பேசுவதே இல்லை.

அவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். பாகிஸ்தானுக்கு சென்று பிரியாணி சாப்பிடுகிறார். ஜப்பானுக்கு சென்று ஊஞ்சல் ஆடுகிறார். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். ஆனால், மக்களின் உண்மையான பிரச்சினைகளை அறிய தனது தொகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு கூட அவர் சென்றது இல்லை.

இந்த அரசின் தவறான கொள்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் தருவதாக சொன்ன வாக்குறுதியை பா.ஜனதா நிறைவேற்றவில்லை. ஜி.எஸ்.டி.யும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் வியாபாரிகளை அழித்து விட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சி, அனைவரையும் சொந்த காலில் நிற்க வைக்கும். ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 24 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவோம். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com