மானாமதுரை அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து வாக்களித்தனர்

மானாமதுரை அருகே கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து கிராமமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
மானாமதுரை அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து வாக்களித்தனர்
Published on

மானாமதுரை,

மானாமதுரையில் இருந்து 8 கி.மீ தூரத்தில் ஏ.விளாக்குளம் கிராமம் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை 60 கி.மீ. தள்ளி உள்ள காளையார்கோவில் தாலுகாவில் அதிகாரிகள் இணைத்து விட்டனர். சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இக்கிராமமக்கள் அனைத்து தேவைகளுக்கும் மானாமதுரையை சார்ந்தே உள்ளனர். இதனால் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இவர்கள் காளையார்கோவில் சென்று வர வேண்டியுள்ளது. ஏ.விளாக்குளத்தில் இருந்து காளையார்கோவிலுக்கு இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டும். மானாமதுரை வந்து அதன்பின் சிவகங்கை சென்று காளையார்கோவில் செல்ல வேண்டும்.

எனவே தங்கள் கிராமத்தை மானாமதுரை தாலுகாவில் இணைக்க பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் நேற்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு செய்ய வராமல் நேற்று தேர்தலை புறக்கணித்தனர்.

மேலும் கிராமமக்கள் தேர்தலை புறக்கணித்து ஊர் பொதுமந்தையில் அமர்ந்துள்ளனர்.

இதனால் காலை 12 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இக்கிராமத்தில் 610 வாக்குகள் உள்ளன.

இதைதொடர்ந்து சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கோரிக்கைகள் குறித்து தேர்தலுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து வாக்களிக்க கிராம மக்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதனால் மதியம் 12 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு அடைந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வாக்கு அளித்து இருந்தனர்.

இதேபோல் சிவகங்கையை அடுத்துள்ள திருமண்பட்டி, வில்லிப்பட்டி, அரங்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் முறையான குடிநீர் வசதி, போதிய சாலை வசதியில்லை.

இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து அங்கு சென்ற அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்ததுடன் குடிநீர் வசதி செய்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு வாக்களிக்க சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com