குடியாத்தம்,
குடியாத்தம் அருகே மோர்தானா, சயனகுண்டா, தனகொண்டபள்ளி, மோடிகுப்பம், குடிமிப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் ஆந்திர மாநில எல்லையையொட்டிய வனப்பகுதியில் உள்ளன. ஆந்திர மாநிலம் கவுண்டன்ய யானைகள் சரணாலயத்தில் வசிக்கும் யானைகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
வனத்துறை இவற்றை விரட்டினாலும் அவை மீண்டும், மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுகிறது.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு 16 யானைகள் காட்டுக்குள் விரட்டப்பட்டது. அந்த யானைகள் வீரிசெட்டிபள்ளி காப்புக்காடு வழியாக வேலூர் வனச்சரகம் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை (டெல்) அருகே உள்ள காட்டுப்பகுதியில் முகாமிட்டது. தொடர்ந்து யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து நாசப்படுத்தி வந்தது.
இந்த நிலையில் குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பம் அருகே குடிமிப்பட்டியில் விவசாயி ஒருவர் தன் நிலத்துக்கு யானைகள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த மின்வேலியில் சிக்கி காட்டுயானை ஒன்று இறந்துள்ளது. காலையில் இறந்து கிடந்த யானையை பார்த்த அந்த நிலத்தின் உரிமையாளர் யாருக்கும் தெரியாமல் அதன் மீது தென்னை ஓலைகளை போட்டு மூடி வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து நேற்று மாலை அந்தப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் யானையை அவர் புதைத்துள்ளார்.
இந்த தகவல் கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா ஆகியோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று நடத்திய விசாரணையில் யானை புதைக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து அந்த இடத்தை இன்று (திங்கட்கிழமை)தோண்டி யானையின் உடலை எடுத்து விசாரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் விவசாய நிலத்துக்கு மின்வேலி அமைப்பது சட்ட விரோதம் ஆகும். வனப்பகுதியில் எங்காவது விலங்குகள் இறந்து கிடந்தால் வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் இங்கு இறந்த யானையை வனத்துறைக்கு தெரியாமல் புதைத்துள்ளனர். எனவே யானை உடலை தோண்டி எடுத்து சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.