

சென்னை,
தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு இடம்பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் அப்படியே இடம்பெற்றுள்ளன. புதிதாக மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் இணைந்துள்ளன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் நடத்தி வரும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கொண்ட குழு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முதற்கட்ட பேச்சுவார்த்தையில், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இந்த கட்சிகளுடன் எத்தனை தொகுதிகள் என்று முடிவு எட்டப்படவில்லை. மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இன்று இணைகிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி, தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது. இந்த நிலையில் இன்று திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவை, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
எஸ்டிபிஐ கட்சி 3 தொகுதிகளை எதிர்பார்க்கும் நிலையில், நெல்லை, தென்காசி, வேலூர் உள்ளிட்ட 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.