ஆட்சியில் பங்கு கேட்டு தி.மு.க.வுடன் மல்லுகட்டும் காங்கிரஸ்: காத்திருக்கும் டாக்டர் ராமதாஸ்!

சட்டசபை தேர்தலில் தி.மு.க. மாற்றி யோசிக்க தொடங்கியிருக்கிறது.
ஆட்சியில் பங்கு கேட்டு தி.மு.க.வுடன் மல்லுகட்டும் காங்கிரஸ்: காத்திருக்கும் டாக்டர் ராமதாஸ்!
Published on

சென்னை,

ஒவ்வொரு கட்சியும் புதிதாக உதயமாகும்போது கொள்கை, கோட்பாடு என தனியாக வகுத்து செயல்படத் தொடங்குகின்றன. ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால், அதை எல்லாம் ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, அதிக 'சீட்' தரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்படுவது என்பது அரசியல் வரலாற்றில் எழுதப்படாத விதியாக உள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் 15 ஆண்டுகள் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்தியாக ஆட்சியில் கோலோச்சி வந்தாலும், 1967-ம் ஆண்டு தி.மு.க.விடம் ஆட்சியை பறிகொடுத்தது. அதன் பிறகு, கடந்த 58 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியவில்லை.

தேர்தல் வரும்போது எல்லாம் திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. உடனேயே கூட்டணி அமைத்து, அவர்கள் முதுகிலேயே பயணிக்கும் நிலை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பது கடந்த (2024) நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்பட்டது.

அந்தத் தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 10.68 சதவீதம் ஆகும். ஆனால், மற்றொரு தேசிய கட்சியான பா.ஜ.க. அதைவிட கூடுதலாக, அதாவது 11.24 சதவீத வாக்குகளை பெற்றது. இதில் இருந்தே தமிழ்நாட்டில் காங்கிரஸ் சறுக்கலை சந்திப்பதும், பா.ஜ.க. வளர்ச்சியை நோக்கி செல்வதும் தெள்ளத்தெளிவாக தெரியத் தொடங்கியது.

இதனால், கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்திக்க நினைக்கிறது. அதனால்தான், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க.விடம், ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடம் என்றெல்லாம் கறாராக வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தி.மு.க.வோ, "இந்தியா கூட்டணியில் வலுவான கட்சியே நாம்தான். நாம் இருப்பதால்தான் மத்தியில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் காங்கிரஸ் இருக்கிறது" என்று நினைக்கிறது.

இதுபோன்ற நிலையில்தான், ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் கட்சியிடம் அது முடியாது என்று நேரடியாகவே தி.மு.க. சொல்லிவிட்டது. இருந்தாலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முதல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் வரை இதே கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால், சட்டசபை தேர்தலில் தி.மு.க. மாற்றி யோசிக்க தொடங்கியிருக்கிறது. நாம் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டால் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கட்டும். அல்லது அவர்கள் வெளியேறினாலும் பரவாயில்லை. அதற்கு பதிலாக தே.மு.தி.க., பா.ம.க.வை (டாக்டர் ராமதாஸ் அணி) உள்ளே கொண்டுவந்தால், இழக்கும் வாக்கு சதவீதத்தை ஈடுகட்ட முடியும் என்று தி.மு.க. நம்புகிறது.

இந்த நிலையில், தே.மு.தி.க.விடம் கூட்டணியை இறுதி செய்யும் நிலையில் உள்ள தி.மு.க., பா.ம.க.வுடன் இன்னும் தொடங்கவே இல்லை. இதனால், காத்திருந்து பார்த்த டாக்டர் ராமதாஸ், தி.மு.க.வின் எண்ணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள, கடந்த சில நாட்களுக்கு முன்பு, "தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன 159-வது வாக்குறுதி என்னவானது?" என்ற அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதன்பிறகு, டாக்டர் ராமதாசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. "காங்கிரஸ் கட்சியுடன் முதலில் பேச்சு வார்த்தையை முடித்துக்கொள்கிறோம். அதன்பிறகு உங்களிடம் பேசுகிறோம்" என்று தெரிவித்தாராம். முதல்-அமைச்சரின் வாக்குறுதியை நம்பி டாக்டர் ராமதாசும் காத்து கொண்டிருக்கிறாராம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com