கேரளா, அசாம், புதுச்சேரியில் அதிக வாக்குப்பதிவு: தமிழகத்திலும் எதிரொலிக்குமா.?

புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
கேரளா, அசாம், புதுச்சேரியில் அதிக வாக்குப்பதிவு: தமிழகத்திலும் எதிரொலிக்குமா.?
Published on

சென்னை,

சட்டசபை தேர்தல்

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் நேற்று முன்தினம் (9-ந் தேதி) வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் வரும் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 2-வது கட்ட வாக்குப்பதிவு 29-ந் தேதி நடக்கிறது. 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ந் தேதி நடக்க இருக்கிறது.

அதிகபட்ச வாக்குப்பதிவு

நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடைபெற்ற கேரளா (140 தொகுதிகள்), அசாம் (126), புதுச்சேரி (30) மாநிலங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, கேரளாவில் 74.57 சதவீதமும், அசாமில் 82.04 சதவீதமும், புதுச்சேரியில் 81.88 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஆனால், இந்தத் தேர்தலில் 3 மாநிலங்களிலும் வாக்கு சதவீதம் கடந்த முறையைவிட அதிகரித்து இருந்தது. அதாவது, கேரளாவில் 84.42 சதவீதமும், அசாமில் 84.42 சதவீதமும், புதுச்சேரியில் 91.23 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

பொதுவாக, தேர்தலின்போது வாக்கு சதவீதம் அதிகரித்தால், ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தி அல்லது ஆளுங்கட்சிக்கு அதிக ஆதரவு என்ற நிலைப்பாட்டை மக்கள் எடுத்திருப்பதாக கூறுவார்கள்.

Also Read
“உண்மையான மக்களாட்சியை அமைப்போம்..” - தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
கேரளா, அசாம், புதுச்சேரியில் அதிக வாக்குப்பதிவு: தமிழகத்திலும் எதிரொலிக்குமா.?

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி

இதுபோன்ற நிலையே 3 மாநில தேர்தல்களிலும் எதிரொலித்தாலும், சமீபத்தில் நடந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியே (எஸ்.ஐ.ஆர்.) இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்தப் பணியின்போது, இறந்தவர்களின் பெயரில் இருந்த வாக்காளர் அட்டை நீக்கம் செய்யப்பட்டது. இதேபோல், இரட்டை பதிவும் கண்டுபிடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

அந்த வகையில், கேரள மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்பு 2 கோடியே 78 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, அதில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 பேர் இடம்பெற்றிருந்தனர். அதாவது, 8½ லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதேபோல், அசாம் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்பு 2 கோடியே 62 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானபோது, அதில் 2 கோடியே 49 லட்சம் பேர் இடம்பெற்றிருந்தனர். அதாவது, 13½ லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்பு 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் இருந்தனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானபோது, அதில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 211 பேர் இடம்பெற்றிருந்தனர். அதாவது, 77 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்பட்டதால், 3 மாநில தேர்தல்களில் வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தலிலும் இதேபோல் வாக்கு சதவீதம் உயருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழ்நாட்டு நிலவரம்:

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு முன்பு 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானபோது, அதில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இருந்தனர். அதாவது, 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த முறை 85 சதவீதத்தை தாண்டி புதிய வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 16 சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் வருமாறு:-

1952 - 54.75

1957 - 46.56

1962 - 70.65

1967 - 76.57

1971 - 72.10

1977 - 61.58

1980 - 65.42

1984 - 73.47

1989 - 69.69

1991 - 85.11

1996 - 66.95

2001 - 59.07

2006 - 70.82

2011 - 78.01

2016 - 74.81

2021 - 72.78

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com