

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.
முன்னதாக, தவெக தலைவர் விஜய், நேற்று மாலை கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.
இதற்கிடையே, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. அ.தி.மு.க.வுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து தி.மு.க. அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்திக்க உள்ளார். இதற்காக விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கிண்டி, கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் விஜய் கோரிக்கை வைக்க உள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் கவர்னரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்த உள்ளார்.