இந்திய அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளை பின்பற்றி கவர்னர் செயல்பட வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

கவர்னர் உரையை விலக்கும் நடைமுறையை கொண்டு வர அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க, பாரம்பரியமான தமிழக சட்டமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நெறிமுறைகளை பின்பற்றி கவர்னர் உள்ளிட்ட அனைத்து பிரதிநிதிகளும் செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தமது கருத்துகளை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி நடக்க வேண்டும்:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகள் மிகச் சிறந்த முறையில் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளை மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும். அத்துடன் மத்திய அரசின் பிரதிநிதிகளாக உள்ள கவர்னர்களும், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி தங்களது கடமைகளையும், பணிகளையும் நிறைவேற்றி ஜனநாயகத்தின் மரபுகளை காப்பாற்ற வேண்டும்.
இந்திய ஜனநாயகம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெருமை அளிக்கும் ஜனநாயகமாக இருந்து வருகிறது. இந்த பெருமையை மத்திய, மாநில மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் அனைவரும் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டியது அவர்களின் கடமையாகும். அதன்மூலம் மட்டுமே, அரசியலமைப்பு சட்டத்தின் நெறிமுறைகள் எப்போதும் வலிமையாக இருக்கும். இதனை மத்திய, மாநில மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் உணர்ந்து கொண்டு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இது தான் தொடர்ந்து பின்பற்றும் மரபாக இருந்து வருகிறது.
பாரம்பரியமான சட்டமன்றம்:
தமிழக சட்டமன்றம் என்பது நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஜனநாயக பாரம்பரியமான சட்டமன்றமாகும். வரலாற்று புகழ்பெற்ற இந்த சட்டமன்றத்தின் அனைத்து மரபுகளையும், நெறிமுறைகளையும் காப்பாற்றப்பட வேண்டும். அதன் மூலம் ஜனநாயகம் பெருமை அடையும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழக சட்டமன்றத்தின் மாண்பு எப்போதும் போற்றும்படி இருந்து வருகிறது. இதனை எப்போதும் நிலைநிறுத்தும் வகையில் அனைத்து பிரநிதிகளும் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டும். அதன்மூலம் மட்டுமே, ஜனநாயகம் தழைத்து நிலைத்து நீடிக்கும். முரண்பாடுகளை கைவிட்டு விட்டு, தொடர்ந்து சிறந்த முறையில் சட்ட விதிகளின்படி நடப்பது சட்டமன்ற மரபுகளை மேலும் வலிமைப்படுத்தும் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆளுநர் ரவியின் செயல்பாடு வேதனை:
தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுக்கும் உரைகளை தான் கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் வாசிப்பது சரியான மரபாகும். அப்படி வாசிப்பது தனது பொறுப்பு என்பதையும் கவர்னர் மனதில் கொள்ள வேண்டும். ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சிகளை விட ஒருபடி மேலே சென்று, அரசு தயாரித்த உரைகளை படிக்காமல் வெளிநடப்பு செய்வதும் அரசுக்கு எதிராக பேசுவதும், மக்கள் அளித்த தீர்ப்புக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும், இந்திய அரசிலமைப்புச் சட்ட விதிகளுக்கும் முரணான ஒன்றாகும்.
உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை இந்தியா நாடு பெற்று உள்ளது. இந்த பெருமையை மத்திய, மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் அனைவரும் காப்பாற்ற அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நெறிமுறைகளை அவசியம் பின்பற்றுவது தான் சரியான ஜனநாயக நெறிமுறையாகும். பாரம்பரிய மிக்க தமிழக சட்டமன்றத்தில், ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணாக நடப்பது மக்களுக்கும், ஜனநாயக வழிமுறைகளுக்கும் எதிரான ஒன்றாகும். தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி இத்தகைய முறையில் நடந்துகொள்வது சட்டமன்ற மரபுகளுக்கு விரோதமானது. இதனை எதிர்காலத்தில் அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
முதல்-அமைச்சரின் கருத்துக்கு வரவேற்பு:
இத்தகைய சூழ்நிலையில், ஆண்டு தொடக்கத்தில் கவர்னர் உரை என்ற நடைமுறையில் திருத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கவர்னர் உரையை விலக்கும் நடைமுறையை கொண்டு வர அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா முழுவதும் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ள கருத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






