மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த முன்கூட்டியே திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என சிவசேனா மத்திய அரசை மறைமுகமாக சாடியுள்ளது.
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்
Published on

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை. முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால் இந்த நிலை ஏற்பட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் களம் இறங்கிய சிவசேனாவின் கனவும் தகர்ந்தது.

ஆட்சி அமைப்பதற்கு 3 நாள் அவகாசம் கேட்ட அக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த கவர்னர் பகத்சிங் கோஷியாரி 3-வது பெரிய கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். உரிய நேரத்தில் யாரும் ஆட்சியமைக்க முன்வராததால் நேற்று முன்தினம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்து தங்கள் கட்சியை சேர்ந்தவர் தான் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி என கூறி வரும் சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை.

மராட்டிய அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழலே நீடிக்கும் நிலையில், சிவசேனா தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:- மராட்டியத்தில் ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தின் படி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகாரம் இன்னமும் மறைமுகமாக பாஜகவின் கைகளிலேயே உள்ள நிலையில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிட்டதாக முதலைக்கண்ணீர் வடிக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ் .

மராட்டியத்தில், தற்போது நடைபெறும் அரசியல் ஆட்டத்தை அறிய முடியாத ஒரு சக்தி கட்டுப்படுத்தி, முடிவுகள் அதன் உத்தரவுப்படியே எடுக்கப்பட்டது போல தெரிகிறது. நாங்கள், ஆளுநர் மாளிகை சென்று ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கோரிய போது, உரிய மரபு பின்பற்றப்படவில்லை. சட்டசபை காலம் முடியும் வரை ஆளுநர் காத்திருந்தார். முன்கூட்டியே அவர், புதிய அரசு அமைவதற்கான நடைமுறைகளை தொடங்கியிருக்க வேண்டும். ஆளுநர் மிகவும் கனிவானவர், ஆட்சி அமைக்க தற்போது ஆறு மாத கால அவகாசத்தை அவர் வழங்கியிருக்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com