ஒடிசாவில் புயல் சேதங்களை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார் - கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி உதவி அறிவிப்பு

ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார். நிவாரண பணிகளுக்காக கூடுதலாக ரூ.1,000 கோடி வழங்குவதாக அவர் அறிவித்தார்.
ஒடிசாவில் புயல் சேதங்களை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார் - கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி உதவி அறிவிப்பு
Published on

புவனேஸ்வர்,

வங்கக்கடலில் உருவான பானி புயல், ஒடிசா மாநிலத்தை கடந்த வெள்ளிக் கிழமை கடுமையாக தாக்கியது. குறிப்பாக, பூரி மாவட்டம் புரட்டி போடப்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

ஒடிசா மாநிலத்துக்கு ஏற்கனவே மத்திய அரசு முன்பணமாக ரூ.381 கோடி விடுவித்தது. கடந்த சனிக்கிழமை, ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, ஒடிசாவுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (நேற்று) பார்க்க உள்ளதாக பிரதமர் மோடி ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி, பிரதமர் மோடி நேற்று ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வருக்கு விமானத்தில் வந்தார். அவரை விமான நிலையத்தில் கவர்னர் கணேஷி லால், முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

உடனடியாக, ஹெலிகாப்டரில் ஏறி புறப்பட்டார், மோடி. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தபடி அவர் பார்வையிட்டார்.

அப்பணியை முடித்த பிறகு, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நவீன் பட்நாயக் அரசை பாராட்டினார். அவர் கூறியதாவது:-

உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக, கடலோர பகுதி மக்களை அப்புறப்படுத்தியதில் நவீன் பட்நாயக் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மேலும், புயலை எதிர்கொள்ள உரிய முறையில் ஒத்துழைத்த மாநில மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நிவாரண பணிகளுக்காக ஒடிசாவுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வழங்கப்படும். புயலுக்கு பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதிஉதவி வழங்கப்படும்.

விரைவில் மத்திய குழு வந்து, சேத விவரங்களை மதிப்பீடு செய்யும். சிக்கலான தருணங்களில் நிலைமையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு நிலவ வேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்ற பேரிடர்களை சமாளிக்க நீண்டகால திட்டம் வகுக்கப்படும். மாநில அரசுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். மீனவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் மத்திய அரசு உதவி செய்யும், இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பின்னர், ஒடிசா புயல் சேதங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வு கூட்டத்தில், முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு, பிரதமர் மோடி, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com