பிரீபெய்டு ஆட்டோ சேவையில் இணையும் பிரச்சினை: பெட்ரோல்-டீசல் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே மோதல்

பிரீபெய்டு ஆட்டோ சேவையில் இணையும் பிரச்சினை தொடர்பாக காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் பெட்ரோல்-டீசல் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரீபெய்டு ஆட்டோ சேவையில் இணையும் பிரச்சினை: பெட்ரோல்-டீசல் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே மோதல்
Published on

காட்பாடி,

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காகவும், உயர்கல்விக்காகவும் தினமும் ஏராளமானோர் ரெயில் மூலம் காட்பாடிக்கு வருகின்றனர்.

ரெயில் பயணிகளின் வசதிக்காக காட்பாடி ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பெட்ரோல் ஆட்டோ டிரைவர்களுக்கும், டீசல் ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரீபெய்டு ஆட்டோ சேவை 2 முறை நிறுத்தப்பட்டது. இந்த சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ந் தேதி முதல் பிரீபெய்டு ஆட்டோ சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதில், முதற்கட்டமாக 50 பெட்ரோல் ஆட்டோக்கள் இணைக்கப்பட்டது. டீசல் ஆட்டோ டிரைவர்கள் தங்களையும் பிரீபெய்டு ஆட்டோ சேவையில் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதையடுத்து காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த 25 ஆட்டோக்கள் இணைக்கப்பட்டன. மீதமுள்ள 50 டீசல் ஆட்டோ டிரைவர்கள் தங்களையும் அந்த சேவையில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பிரீபெய்டு ஆட்டோ சேவையில் டீசல் ஆட்டோக்களை இணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. அப்போது பெட்ரோல் ஆட்டோ டிரைவர்களுக்கும், டீசல் ஆட்டோ டிரைவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெட்ரோல்-டீசல் ஆட்டோ டிரைவர்கள் காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத்திடம் முறையிட்டனர். அப்போது டீசல் ஆட்டோ டிரைவர்கள் மீதமுள்ள அனைத்து டீசல் ஆட்டோக்களையும் பிரீபெய்டு ஆட்டோ சேவையில் இணக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் இதுகுறித்து சென்னையில் உள்ள ரெயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டு, அதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com