புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் என தனது டுவிட்டரில் சிலவற்றை பட்டியலிட்டு உள்ளார்.
அதில், கொரோனா காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரியில் நமஸ்தே டிரம்ப், மார்ச்சில் மத்திய பிரதேச அரசை கவிழ்த்தது, ஏப்ரலில் மக்களை மெழுகுவர்த்தி ஏற்றச்செய்தல், மே மாதத்தில் அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம், ஜூனில் பீகார் மெய்நிகர் பேரணி, ஜூலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்கும் முயற்சி என தெரிவித்து உள்ளார்.
இந்த சாதனைகளினால் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாடு 'தன்னிறைவு பெற்றது' என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறும்பொழுது, ராகுல் காந்தி தினமும் டுவிட் செய்து வருகிறார். டுவிட்களை மட்டுமே வெளியிடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி சுருங்கிவிடும் என நான் நினைக்கிறேன்.
காங்கிரஸ் செயல்படவில்லை என ஒன்றன் பின் ஒன்றாக மாநிலங்கள் நிரூபித்து வருகின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி ஒவ்வொரு வகையிலும் மத்திய அரசை தாக்க முற்பட்டு வருகிறது. ஆனால் அதில் வெற்றி பெறபோவதில்லை.
ராகுல் காந்தியின் கடந்த 6 மாத கால சாதனைகளை பற்றி நான் கூறுகிறேன். கடந்த பிப்ரவரியில் ஷாகீன்பாக் மற்றும் பிற கலவரங்கள், மார்ச்சில் சிந்தியா மற்றும் மத்திய பிரதேச அரசு கைவிட்டு போனது, ஏப்ரலில் தொழிலாளர்களை தூண்டி விட்டது, மே மாதத்தில் தேர்தலில் வரலாற்று தோல்வி கண்டதன் 6வது ஆண்டு தினம், ஜூனில் சீனாவுக்கு ஆதரவாக பேசியது, ஜூலையில் ராஜஸ்தானில் கட்சி அழிந்தது என ஜவடேகர் பட்டியலிட்டுள்ளார்.