ரூ.1000 பணத்துடன் பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுவையில் ரூ.1000 பணத்துடன் பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். இது தொடர்பாக புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.1000 பணத்துடன் பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது முதல் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்ற முடியவில்லை. அவசர கோலத்தில் அறிவிக்கப்படும் திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. மக்களின் வரிப்பணம் ஆட்சியாளர்களின் அலட்சிய போக்கினால் வீணடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு முழுவதும் 12 நாட்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டம் புதுவையில் நடந்துள்ளது.

அடுத்த மாதம்(பிப்ரவரி) 1-ந் தேதி மத்திய பட்ஜெட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் முழுமையான நிதியும் அறிவிக்கப்படும். எனவே அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் வரும் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு முன்வர வேண்டும். அதற்கு முன்னதாக இன்னும் 15 நாட்களுக்குள் கவர்னர் உரை நிகழ்த்த ஏதுவாக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு வழங்குவது போன்று புதுவையிலும் பொங்கல் பரிசாக வீட்டிற்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்களாக சர்க்கரை, கரும்பு, அரிசி ஆகிய பொருட்களும் வழங்க வேண்டும். இலவச அரிசி வழங்கப்படாமல் உள்ள 19 மாத காலத்தில் 5 மாத காலத்திற்கான பணத்தை வழங்க வேண்டும். இதற்காக அமைச்சரவையில் முடிவு எடுக்க வேண்டும்.

மேலும் புதுச்சேரியில் உள்ள 58 ஆயிரம் கூரை வீடுகளை கல்வீடுகளாக மாற்றுவதற்கும், அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கவும் முடிவு எடுக்க வேண்டும். இந்த கோப்புகளை கவர்னருக்கு அனுப்ப வேண்டும். மக்கள் நலன் சார்ந்த இந்த முடிவுகளுக்கு கவர்னர் தடை விதித்தால் அரசுடன் இணைந்து கவர்னரை அதி.மு.க. எதிர்க்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் மாநில நலனுக்கு ஏற்ப பல திருத்தங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் புதுவை அரசு சட்டமன்றத்தை கூட்டாமல், ஒருசில அமைச்சர்களின் சுயநலத்திற்காக ஒருசில திருத்தங்களை செய்து அவசர சட்டம் இயற்றி அனுப்பியுள்ளனர். இது ஜனநாயகத்தை படு குழியில் போட்டு புதைக்கும் செயல்.

மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர ஒரு குடும்பத்திற்கு ரூ.450தான் பிரிமியம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் 2.7 கோடி சிகப்பு அட்டைகளுக்கும் பிரீமியத்தை தமிழக அரசு செலுத்தி வருகின்றது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் சிவப்பு ரேஷன்கார்டுகளில் 1 லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டும் தான் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான பிரீமியம் தொகை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 72 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் விடுபட்டுள்ளனர். எனது தொகுதியில் 8,400 ஏழை குடும்பத்தினர் உள்ளனர். ஆனால் 800 பேர் மட்டுமே மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com