சார்க் நாடுகள் இணைந்து கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி ஆலோசனை

சார்க் நாடுகள் இணைந்து கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனை கூறினார். இதற்கு இலங்கை உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
Published on

புதுடெல்லி,

உலக நாடுகள் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. ஆனாலும் நாளுக்கு நாள் வைரஸ் தாக்குதல் பரவிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் ஒரு ஆலோசனையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நமது உலகமே புதிய கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறது. அரசுகளும், மக்களும் தாக்குதலை கட்டுப்படுத்த தங்களால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

தெற்காசியா, உலக மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அளவு மக்களின் இருப்பிடமாக உள்ளது. எனவே மக்கள் ஆரோக்கியமாக இருக்க நாம் எல்லாவித முயற்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றிணைந்து, சுகாதாரமான கிரகத்துக்கான பங்களிப்பாக நாம் இந்த உலகுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவோம்.

சார்க் நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராட ஒரு வலிமையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். நாம் இதுகுறித்து காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுவோம். இதன் மூலம் குடிமக்களை ஆரோக்கியமாக வைத்திருப்போம்.

இவ்வாறு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மோடியின் இந்த ஆலோசனைக்கு இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்சே உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் உடனடியாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோத்தபயா ராஜபக்சே, அருமையான முயற்சிக்காக உங்களுக்கு நன்றி நரேந்திர மோடி. விவாதத்தில் பங்கேற்க இலங்கை தயாராக இருக்கிறது. நாங்கள் கற்றுக்கொண்டதை பகிர்கிறோம், மற்ற உறுப்பு நாடுகள் கூறும் சிறந்த நடவடிக்கைகளை கற்றுக்கொள்கிறோம். இந்த நேரத்தில் நாம் ஒன்றுபட்டு நமது குடிமக்களை பாதுகாப்பாக வைத்திருப்போம் என்று கூறியுள்ளார்.

அதேபோல மாலத்தீவு ஜனாதிபதி இப்ராகிம் முகமது சாலிஹ், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, பூடான் பிரதமர் லோடாய் ஷெரிங் ஆகியோரும் இந்த ஆலோசனைக்கு தாங்களும் உடன்படுவதாக கூறியதோடு, மோடிக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com