

வெளிநாட்டுப் பயணம் என்றாலே அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. குறிப்பாக இந்திய ரூபாயை அமெரிக்க டாலர், யூரோ போன்ற வலுவான வெளிநாட்டு கரன்சிகளாக மாற்றும்போது செலவு அதிகமாகத் தெரியும். ஆனால், சில நாடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருப்பதால், குறைந்த பட்ஜெட்டிலும் வெளிநாட்டுப் பயணத்தை திட்டமிட முடியும். இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பணத்தின் மதிப்பு சிறப்பாக இருக்கும் 10 நாடுகளை பார்க்கலாம்.
1. வியட்நாம்
வியட்நாமில் 1 இந்திய ரூபாய் சுமார் 276 வியட்நாமிய டாங்கிற்கு சமம் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த செலவில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இது ஏற்ற நாடாகும். ஹனோய் நகரம், ஹோய் ஆன், சாபா உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்கலாம். உள்ளூர் உணவுகளும் தங்கும் வசதிகளும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் கிடைக்கின்றன.
2. இந்தோனேசியா
1 இந்திய ரூபாய் சுமார் 186 இந்தோனேசிய ரூபியாவுக்கு சமம். பாலி தீவு மட்டுமின்றி யோக்யகர்த்தா உள்ளிட்ட பல பகுதிகளையும் சுற்றிப் பார்க்கலாம். உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் குறைவாக இருப்பதால் நீண்ட விடுமுறைக்கும் ஏற்றதாக உள்ளது.
3. நேபாளம்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் 1 இந்திய ரூபாய் சுமார் 1.6 நேபாள ரூபாய்க்கு சமம். இமயமலைப் பகுதிகள், எவரெஸ்ட் பேஸ் கேம்ப், போக்ரா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் பயணிகளை ஈர்க்கின்றன. இந்தியர்களுக்கு நெருக்கமான பயண இலக்காகவும் நேபாளம் உள்ளது.
4. இலங்கை
இலங்கையில் 1 இந்திய ரூபாய் சுமார் 3.47 இலங்கை ரூபாய்க்கு சமம். கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்கள், பழமையான நகரங்கள் என பல்வேறு சுற்றுலா அனுபவங்களை இங்கு பெறலாம். கண்டி முதல் எல்லா வரையிலான ரெயில் பயணமும் பிரபலமானது.
5. கம்போடியா
1 இந்திய ரூபாய் சுமார் 49 கம்போடிய ரியலுக்கு சமம். வரலாறு மற்றும் கட்டிடக்கலை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு கம்போடியா சிறந்த தேர்வாகும். குறிப்பாக உலகப் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோவில் வளாகம் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.
6. மியான்மர்
மியான்மரில் 1 இந்திய ரூபாய் சுமார் 25 மியான்மர் கியாட்டிற்கு சமம். பழமையான கோவில்கள், பாரம்பரிய கலாசாரம் உள்ளிட்டவற்றை இங்கு காணலாம். பாகன் பகுதியில் உள்ள பழமையான கோவில்கள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன.
7. பராகுவே
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் 1 இந்திய ரூபாய் சுமார் 89 பராகுவே குவாரனிக்கு சமம். மற்ற சில தென் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு வாழ்க்கைச் செலவு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தலைநகர் அசுன்சியோன் மற்றும் இயற்கைச் சுற்றுலாத் தலங்களை ரசிக்கலாம்.
8. ஹங்கேரி
ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு ஹங்கேரி ஓரளவு பட்ஜெட் பயணத்தை வழங்கக்கூடிய நாடாக உள்ளது. 1 இந்திய ரூபாய் சுமார் 4.3 ஹங்கேரிய ஃபோரின்ட்டிற்கு சமம். தலைநகர் புடாபெஸ்ட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், வெப்ப நீரூற்றுக் குளங்கள் உள்ளிட்டவற்றை காணலாம்.
9. தான்சானியா
தான்சானியாவில் 1 இந்திய ரூபாய் சுமார் 30 தான்சானிய ஷில்லிங்கிற்கு சமம். வனவிலங்கு சஃபாரி மற்றும் இயற்கைச் சுற்றுலாவை விரும்புபவர்களுக்கு இது சிறந்த இடமாகும். செரென்கெட்டி மற்றும் கிளிமஞ்சாரோ மலை ஆகியவை முக்கிய ஈர்ப்புகளாக உள்ளன.
10. உஸ்பெகிஸ்தான்
மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் 1 இந்திய ரூபாய் சுமார் 145 உஸ்பெகிஸ்தான் சோமிற்கு சமம். சில்க் ரூட் வரலாற்றுடன் தொடர்புடைய இந்த நாட்டில் பழமையான கட்டிடங்கள், சந்தைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளை ரசிக்கலாம். குறிப்பாக சமர்கண்ட் நகரம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது.