

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சிக்கன் 65 செய்வது எப்படி? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். அதற்கு முன்பாக, இந்த பெயர் எப்படி வந்தது? என்பதை தெரிந்துகொள்வோம். 1965-ம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் (இன்றும் இருக்கிறது) எண்ணெய்யில் சிக்கன் பொரித்து வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது, வாடிக்கையாளர் ஒருவர், "இதற்கு என்ன பெயர்?" என்று கேட்டுள்ளார். அதற்கு, கடை உரிமையாளர், "சிக்கன் 65" என்று தெரிவித்துள்ளார். அதாவது, சிக்கனுடன் அந்த ஆண்டையும் இணைத்து கூறியுள்ளார். அன்று முதல் "சிக்கன் 65" என்று அழைக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்:-
சிக்கன் - ½ கிலோ (எலும்பு நீக்கியது)
கடலை எண்ணெய் - ½ லிட்டர்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். அதில், தயிர், இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலா, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, சோள மாவு, மிளகாய் பொடி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். அடுத்து முட்டையை உடைத்து ஊற்றவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா ரெடி.
அதன்பிறகு, நன்கு கழுவிவைத்த சிக்கன் துண்டுகளை மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறவும். அனைத்து சிக்கன் துண்டுகள் மீதும் மசாலா படவேண்டும். அதன்பிறகு, அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர், கியாஸ் அடுப்பில், வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைத்து 'ஆன்' செய்யவும். கடலை எண்ணெயை அதில் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடாகியதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான "சிக்கன் 65" தயார்.